பார்... இங்கே BAR எனப் பொருள் கொள்ளப்படுகிறது.
எனது வாழ்வில் தவிர்க்க முடியாததோர் இடம். எனக்கு ஐந்து ஆண்டு காலம் உணவு, உடை, உறைவிடம் அளித்த இடம், இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் படித்து முடிக்க பொருளாதார உதவியைச் செய்த இடம், சில முக்கிய நட்புகளை அறிமுகப்படுத்திய இடம், எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்வனுபவத்தை ஓரளவு கற்பித்த இடம்.
சென்னையில் உள்ள மூன்று நட்சத்திர வகையறா ஓட்டல் பாரில் ஐந்து ஆண்டு காலம் வெயிட்டராக பணிபுரிந்த பேரனுபவம் எனக்குண்டு.
அன்பு, அறிவு, அனுபவம், நட்பு, மேன்மை, பொறாமை, துரோகம், ஏமாற்றம், லட்சியம், அலட்சியம், மோசம், நாசம், வேஷம்...
இப்படி வாழ்க்கையில் அங்கம் வகிக்கும் ஒற்றைச் சொற்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவையனைத்தையும் ஒருங்கே பெற்ற இடம் தான், அந்த மதுபான சேவையளிக்கும் பார்.
இப்போது, சமூகத்தில் ஏதோ ஒரு பொறுப்புள்ளவனாக இருக்கிறேனென்றால், அதற்குக் காரணம் அந்த பார் அனுபவமும் முக்கியமானது.
மிகச் சுலபமாக எவருக்கும் கிடைத்திடாத களம் அது. அத்தகைய களத்தில் பார்வையாளனாக அல்லாமல் பணியாளனாகவும் இருந்துள்ளதால், ஓரளவு அனிச்சையாகவே பல நிகழ்வுகள் என் மனத்தில் பதிந்துவிட்டிருந்தன. குறிப்பாக, மனிதர்களை என்னால் படிக்க முடிந்தது. ஒவ்வொரு மாறுபட்ட சம்பவங்களும் ஒவ்வொரு அனுபவத்தையும், புரிதலையும் தந்தன.
ஆண்டுக்கொரு முறை மது அருந்துபவரில் இருந்து ஆண்டுக்கொருநாள் முறை மது அருந்துவதை தவிர்க்க முற்படும் மனிதர்கள் வரை எத்தனை விதமான மனிதர்கள்.
அந்தக் களத்தில் வாழ்ந்துவிட்டதால், அந்த அனுபவத்தை அசை போட்டு 'நாவல்' ஒன்றை எழுதாலாமே என்று எண்ணியிருந்தேன். நாவல் என்ற இலக்கிய வடிவத்தை பயன்படுத்தும் அளவுக்கு என்னிடம் எழுத்தாற்றல் இல்லை என்பது தெளிவு.
நாளுக்கு நாள் பிரச்னைகளும் நாட்டங்களும் மாறி மாறி ஆட்கொள்வதால், எனது 'பார்' காலம் கால மாற்றத்தால் அல்ஸீமர் நிலையை அடைந்துவிடுவோமோ என்ற அச்சம் ஏற்பட்டதன் பலனாகவே இங்கே எனது பார் காலத்தை பதிவு செய்ய முனைந்துள்ளேன்.
எழுத்து நடை வசீகரிக்காமல் போனாலும், நான் சந்தித்த அனுபவம் உங்களுக்கு சுவாரசியத்தைக் கொடுக்கும் என்பதால் இதைத் தொடர்ந்து படிக்கும் விழைவு ஏற்படக்கூடும் என்று நம்புகிறேன்.
விஷயம் இதுதான்...
சென்னையில் கல்லூரி ஒன்றில் இளங்கலை இரண்டாமாண்டு செல்லத் தொடங்கியபோது, சாப்பாட்டுக்கும் படிப்புக்கும் பகுதி நேர வேலை செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கிடைத்த வேலை... மூன்று நட்சத்திர வகையைச் சேர்ந்த ஓட்டலின் 'பார் வெயிட்டர்' போஸ்ட். இந்த வேலையின் நேச்சர் காரணமாக, படிப்பு பார்ட் டைம் ஆனது... வேலை ஃபுல் டைம் ஆனது!
காலை 9 மணி முதல் 2.00 மணி வரை காலேஜ், மதியம் 2.00 மணி முதல் 12.00 மணி வரை பார். இப்படித்தான் 5 ஆண்டு காலம் சென்றது.
"ஐயோ பாவம்... படித்துக் கொண்டு, நண்பர்களுடன் ஹாயாக ஊர் சுற்றி வாழ்க்கை என்ஞ்சாய் பண்ணும் சூழலில், இப்படி கஷ்டப்பட்டிருக்கிறானே..!" என்று யாரும் 'உச்'சுக் கொட்டிவிட வேண்டாம். அந்த அற்புதமான, மகிழ்ச்சிகரமான, மேன்மையான, சந்தோஷங்கள் நிறைந்த வாழ்க்கையை அணுஅணுவாய் அனுபவித்தவன் நான்!
*
அந்த ஓட்டலில் சேர்ந்த நாள் முதல் கடைசியாக விலகல் கடிதம் கொடுத்த நாள் வரை என் நினைவில் இருக்கும் சுவாரசிய (சுவாரசியம் என்று நான் கருதுவதை) அனுபவங்களை அடுத்தப் பதிவு முதல் பதிவு செய்ய போகிறேன்.
அது எத்தனை அத்தியாங்கள் வரைச் செல்லும் என்பது எனக்குத் தெரியாது.
அதேபோல் எவ்வளவு நாள் இடைவெளியில் எழுதுவேன் என்றும் என்னால் வரையறுத்துக் கூற முடியாது.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார் கால அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வேன்.
அது... பலருக்கும் புது அனுபவமாக இருக்கும் என்றே நம்புகிறேன்!
Thursday, 30 July 2009
'பார்' காலம் : எழுதுவதற்கு முன்னால்...
Posted by அனானியன் at 12:07 am 2 comments
Labels: அனுபவம், சிந்தனை, பார் காலம்
Subscribe to:
Posts (Atom)