மூன்று நட்சத்திர கேட்டகரி ஓட்டலின் செக்யூரிட்டி கேட் பகுதியில் நின்று கொண்டிருக்கிறேன். வெறும் 2 மணி நேரம்தான்.
மேனஜரிடம் இருந்து அழைப்பு வரவில்லை. மணி பிற்பகல் 4.30 இருக்கும். மேனேஜர் என்று சொல்லப்பட்டவர் பைக்கில்
கிளம்பிக் கொண்டிருந்தார். செக்யூரிட்டியில் ஒருவரான கார்த்தி அண்ணன் என்பவர், "டேய் ... அவர்தாண்டா மேனேஜர்.
போய் பேசு உடனே.."
சட்டென மேனேஜர் அருகே சென்று நின்றேன்.
"சார் நான் சுரேஷ்..." (என் பெயர் இங்கே மட்டுமல்ல.. எங்கேயும் மாற்றப்படுகிறது)
"சொல்லுப்பா.. "
"சார் நான் இங்கிலீஷ் லிட்டரேச்சர் செகண்ட் இயர் படிக்கிறேன். மார்னிங் நைன் டூ டூ வரைக்கும் தான் காலேஜ். மீதி
நேரத்துல ஃப்ரீதான். எனக்கு வேலை வேணும். சர்வீஸ்ல வேலை இருக்குமான்னு கேக்க வந்தேன்," முதல் முறையாக
வேலை கேட்கும் அனுபவம் என்பதால் உளறல் சரளமாக இருந்தது.
மேலும் கீழும் பார்த்தவர், "சாரிப்பா... சர்வீஸ்ல வேக்கண்ட் இல்ல. வேணுன்னா... ஹவுஸ் கீப்பிங்ல டிரை பண்ணு.
கார்த்தி... இவரை ஹவுஸ் கீப்பிங் மேம் கிட்ட அனுப்புங்க." என்று கூறிவிட்டு பைக்கில் பறந்தார்.
----
இந்த அனுபவத் தொடர் குறித்த அறிமுகத்துக்கு... பார் காலம் : எழுதுவதற்கு முன்னால்...
----
மழை.
எப்போதும் மழை என்றால் பிடிக்கும். பள்ளிக்குச் செல்லும் போது மழை வெறுக்கும் மனம், அங்கிருந்து திரும்புகையில்
வெகுவாய் விரும்பும்.
ஆனால், அன்றைய மழை வெறுப்பையேத் தந்தது.
பசி, காசில்லை, அடுத்து எந்த நண்பனிடம் நூறு ரூபாய் கொடுக்காக் கடன் வாங்கலாம் என்ற சிந்தனை, ஹவுஸ் கீப்பிங்
வேலையாவது கிடைக்க வேண்டுமே என்ற ஏக்கம்...
அழகையும் ரசனையையும் முழுமையாய் வெறுத்து ஒதுக்க வைக்கும் மிகப் பெரிய சக்தி, வறுமைக்கும் பசிக்கும் உண்டென
உணர்ந்தேன்.
*
என் முன்னால் ஹவுஸ் கீப்பிங் மேடம் சுகுணா.
"ஹவுஸ் கீப்பிங் வேலைன்னா என்னன்னு தெரியுமாப்பா?"
"எதுவா இருந்தாலும் கத்துகிட்டு செய்வேன் மேடம்."
"இதோ பாரு... இப்படி 'மாப்' போடணும்." அங்கே மழையால் புகுந்திருந்த தண்ணீரை மாப்பினால் துடைத்துக்
கொண்டிருந்தார், ஒரு மூத்த ஹவுஸ் கீப்பர்.
"இது மட்டும் இல்ல. பெருக்கணும், துடைக்கணும், ரூம் க்ளீன் பண்ணனும், பாத்ரூம் டாய்லெட்டல்லாம் க்ளீன்
பண்ணனும்... நீ ஏதோ டிகிரி செகெண்ட் இயர் படிக்கிறேன்னு சொன்னாங்க. இந்த வேலையெல்லாம் செய்வியா?"
"செய்வேன் மேம்."
நிதானமாக என் முகத்தைப் பார்த்தார். ஒரு நடத்தர வயது பெண்ணின் கண்கள் சந்தேகக் குறியுடன் என்னை சில நொடிகள்
பார்த்ததில் இயல்பற்று நின்றேன்.
"சரி. எப்ப ஜாயின் பண்ற?"
"நாளைக்கு ஈவ்னிங்."
"ஓகே.. வா. எப்படி.. என்ன பண்ணனும்னு சூப்பர்வைசர் சொல்லித் தருவாரு."
"தேங்ஸ் மேம். மேம்... ஆஃப்டர்நூன் த்ரீ ஓ க்ளாக்தான் வர முடியும்."
"பரவாயில்லை. த்ரீ டூ லெவன் டியூட்டி. சேலரி ஒன் த்ரீ (ரூ.1,300) ஃபிக்ஸ் பண்ணியிருக்கேன்."
"தேங்ஸ் மேம்."
ரெசஷன் காலத்தில் 50 சதவீத ஊதிய உயர்வு கொடுத்தால், ஓர் ஐ.டி. நண்பர் எவ்வளவு சந்தோஷப்படுவார்...? அதைக் காட்டிலும் நூறு மடங்கு மகிழ்வு என்னில்.
*
முதல் நாள் வேலை.
தண்ணீரையும் சோப்பையும் பார்த்து பத்து நாட்களுக்கும் மேலான யூனிஃபார்ம் கொடுக்கப்பட்டது. மெல்லிய தேகம் என்பதால் லூஸாக இருந்தது. பட்டன் இல்லாத பேன்ட். ஒரு வழியாக மாட்டியாகிவிட்டது. முதலில் தரப்பட்ட வேலை. ஏழு மாடிகளில் உள்ள படிக்கட்டுகளின் பொன்னிற கம்பிகளைத் துடைக்க வேண்டும். எனக்குக் கொடுக்கப்பட்ட இரு துண்டுகளை வைத்துக் கொண்டு கம்பிகளை வேக வேகமாக எண்ணத் தொடங்கினேன். மதியம் சாப்பிடவில்லை. மாலை 5க்கே பசிப் புடுங்கியது. முதல் நாள் வேலையாயிற்றே... முழுவீச்சில் செய்துகொண்டு 5வது மாடியை அடைந்த போது மணி 7 ஆனது.
கேன்டீனில் 7.30 மணிக்கெல்லாம் டின்னர் வந்துவிடும் என்று என் வயதையொத்த சக ஹவுஸ் கீப்பர் செந்தில் தகவலளித்திருந்தார்.
மணி 7.40 ஆகியும் போகவில்லை. யாராவது சீனியர் சொல்லட்டும்; போய்க் கொள்ளலாம் என்ற முதிர்ச்சி சிந்தனை!!??
மணி 8.20க்கும் மேல். 6வது மாடியை அடைந்த போது சுகுணா மேடம் கீழே இறங்கிக் கொண்டிருந்தார். என்னைக் கடந்து சென்றவர், "சுரேஷ் சாப்பிட்டியா?"
"இல்லை மேம்"
"போங்க கேண்டீன் போய் சாப்ட்டு வாங்க."
அந்த வாக்கியத்தை உதிர்த்ததாலேயே, சுகுணா மேடம் எனக்கு அப்போது தேவதையாக காட்சியளித்தார்.
*
உலகிலேயே சுவையான உணவு எது? எப்போது சாப்பீட்டீர்கள்? என்று கேட்கப்பட்டால், பெரும்பாலும் 'அம்மா' சமைத்து அளித்தது தான் என்று பலரும் பதிலளிப்பதைக் கேட்டிருக்கிறேன்.
ஆனால், என்னைக் கேட்டால்...
அரைகுறையாக இரு வேளை சாப்பிட்டு விட்டு, அதுவும் கேன்டீன் போய் பே பண்ணும் பக்குவம் உள்ள நண்பனுடன் தவறாமல் மதிய உணவு என்ற பெயரில் ஒரு கிண்ண அளவில் பிரிஞ்சி சாப்பிட்டுவிட்டு வந்து, இரவு உணவுக்கு 8.20 மணி வரை காத்திருந்த எனக்கு, அந்தக் கேண்டீனில் கொடுக்கப்பட்ட ஆறிய சோறும் சூடான காரக்குழம்புமே உலகின் சுவையான உணவு என்பேன், தயங்கமால்.
*
பார் வெயிட்டர் பதவி கிடைப்பதற்கு முன்னர் 2 மாத காலம் ஹவுஸ் கீப்பராக இருக்க வேண்டியதாகிவிட்டது. ஹவுஸ் கீப்பராக இருந்தபோது, எனது மன நிலை எப்படி இருந்தது..? அடுத்த அத்தியாயத்தில் விரிவாக எழுதலாம் என்று எண்ணியிருக்கிறேன்.
*
Monday, 3 August 2009
பார் காலம் 01 : உலகின் சுவை மிகுந்த டின்னரை சாப்பிட்ட தருணம்
Posted by அனானியன் at 1:24 am
Labels: அனுபவம், நினைவுகள், பார் காலம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
>>அழகையும் ரசனையையும் முழுமையாய் வெறுத்து ஒதுக்க வைக்கும் மிகப் பெரிய சக்தி, வறுமைக்கும் பசிக்கும் உண்டென
உணர்ந்தேன்.<<
ஹ்ம்ம்ம்ம்ம்ம்..
நல்லா போவுதண்ணே!
Post a Comment