பார் காலம் அனுபவத் தொடரில் 20 அல்லது 21 ஆவது அத்தியாயத்தில் எழுதலாம் என்று எண்ணியிருந்த நிகழ்வை, 02-வது அத்தியாயத்திலேயே கட்டாயம் என்ன?
சூழல்...
கமல்ஹாசனின் திரையுலக பொன்விழா ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள் ஆகஸ்ட் 12-ல் தொடங்குகிறதல்லவா? அதான்!
***
இந்த அனுபவத் தொடர் குறித்த அறிமுகத்துக்கு... பார் காலம் : எழுதுவதற்குமுன்னால்...
***
'இவனுக்கும் கமல்ஹாசனுக்கும் என்ன தொடர்பு?' என்று நீங்கள் புருவத்தை உயர்த்துவதில் நியாயம் உள்ளது.
முதலில் கமல்ஹாசன் என்றாலே என் மனத்தில் அன்னிச்சையாக தோன்றி மறையா சினிமா காட்சியை விவரித்துவிடுகிறேன்.
ஒன்று... 'சிப்பிக்குள் முத்து' படத்தில் தனது நாக்கை வெளியில் நீட்டி மழையைச் சுவைக்கும் அற்புதக் காட்சி...
இரண்டு... 'அபூர்வ சகோதரர்களில்' அம்மாவாலேயே சிறுமைபடுத்துகையில் உண்டாகும் உணர்வுகளின் வெளிப்பாடு...
இப்படி அடுக்கத் தொடங்கினால் எளிதில் ஓர் ஆய்வறிக்கை தயார் செய்து விட சாத்தியமுண்டு.
*
சரி. விஷயத்துக்கு வருகிறேன்.
பாரில் வெயிட்டராகி 2 வருடங்கள் ஓடிவிட்ட காலம். ஓட்டலில் சுரேஷ், 'பார்' சுரேஷ் என்றால் அறிந்திடாதோர் எவருமில்லை என்ற பெருமைக்குரிய நாட்கள்!!!
அன்றொரு நாள்...
இரவு 7 மணி. பாரில் பிஸியாக இருந்தபோது, சக ஊழிய நண்பர்களால் ஒரு தகவல் கிடைத்தது.
"ஏழாவது மாடியில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு கமல்ஹாசன் வருகிறார்."
குஷி. ஏற்கெனவே பல தருணங்களில் கமல்ஹாசனைப் பார்த்திருந்த போதும் அன்பே சிவத்தை தரிசித்த சில நாட்களில் கமல்ஹாசனை நேரில் காணும் வாய்ப்பு சற்றே சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
ஃபிரண்ட் ஆஃபிஸ், ரிசப்ஷன் ஃபோன் போட்டேன்.
"ஹாய் அலெக்ஸ். திஸ் இஸ் சுரேஷ்,"
" சொல்லு மச்சி"
"கமல் வராராமே?"
"ஆமா... உன்ன பாக்கதான் வர்றார்!"
"ஓவரா பேசாத. கமல் லிஃப்ட்ல ஏறினதும் கால் பண்ணு. போய் பாக்கணும்."
"சரி. ஸ்நாக்ஸ் உஷார் பண்ணி வை."
"ம்"
*
"சுரேஷ்.. கால்." கேப்டன் சந்திரன் அழைத்தார்.
"ஹலோ"
"டேய் கமல் வந்தாச்சுடா."
"தேங்க்ஸ்டா"
சிலிர்ப்பு. மீண்டும் மீண்டும் சிலிர்ப்பு.
லிஃப்டில் ஏறப் போனேன். ஓட்டலின் பின்புறம் பணியாளர்களுக்கான லிஃப்ட் உள்ளது. முன்புறம் இருப்பது கெஸ்ட்களுக்கானது. நான் வழக்கம் போல் செல்ல முற்பட்டது, பணியாளர்களுக்கான லிஃப்ட்.
அது பார் ப்ரைம் டைம். இரவு 7.30 மணி. படு பிஸியாக இருக்கும் நேரத்தில் 5 நிமிட இடைவெளியில் கமல்ஹாசனைப் பார்த்துவிட வேண்டிய கட்டாயம்.
என் நிலை புரிந்திடாத லிஃப்ட், 6-வது மாடியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஏழெட்டு தடவை பட்டனை அழுத்தியும் பலனில்லை.
'சரி, இது வேலைக்கு ஆவாது. என்ன ஆனாலும் பரவாயில்லை. கண்டிப்பா இந்த நேரத்துல மேனேஜர் எவனும் இருக்க மாட்டாணுங்க. ரிசப்ஷன் போயிட்டு லிஃப்டுலயே போயிடலாம்,' என்று நொடிப் பொழுதில் தீர்மானம் நிறைவேற்றி, அதைச் செயல்படுத்தவும் செய்தேன்.
லிஃப்டில் ஏறிவிட்டேன்.
1... 2... 3... 4...
7
மின்னல் வெளிச்சம் பீறிட்டது... கேமரா கண்கள் ஒளிர்ந்தன... ஒரே ஃப்ளாஷ் மயம்... என் மீது!!!!
கூடவே கரவொலிகள் வேறு!!!
இதெல்லாம் சரியாக 5 முதல் 6 நொடிகள் மட்டும்!
விக்கித்து நின்றேன்!!!!!!
நான் வந்த லிஃப்டைச் சுற்றிக் குழுமியிருந்த கூட்டம் அமைதியாகி பின்னர் எனைப் பார்த்துச் 'சிரிக்க'த் தொடங்கியது.
பார் யூனிஃபாமில் இருநூறு பேரால் காமெடி பீஸ் ஆன தருணம் உடனடியாக அவமான உணர்வைக் கொடுத்ததில், தேவையற்ற புன்னகையையை உதிர்த்துக் கொண்டே அவ்விடத்தில் இருந்து எஸ்கேப் ஆனேன்!
விஷயம் இதுதான்...
மேலே காத்திருந்தோருக்கு கமல்ஹாசன் லிஃப்டில் வருகிறார் என்று தகவல் அனுப்பட்டிருந்த நிலையில், கீழே கமல்ஹாசன் லிஃப்டில் ஏறுவதற்கு சற்றே முன்பு நான் ஏறிக் கொண்டேன்.
7 ஆவது மாடியில் லிஃப்ட் திறந்த போது, கமல்ஹாசன் என்று நினைத்து என் மீது ஃப்ளாஷ், மின்னல், வெளிச்சம், ஆர்ப்பாட்டம், இன்னபிற!
அன்று கமல்ஹாசனைப் பார்க்கவில்லை. பார்க்க மனமில்லை. ஒருவித கூச்ச உணர்வு மட்டுமே படர்ந்திருந்தது.
கீழே பாருக்கு வந்து வழக்கமாக இயங்கத் தொடங்கினேன்.
மேலே நடந்த சம்பவம், சரியாக ஓபன் பண்ணத் தெரியாதவனால் ஓபன் பண்ணப்படும் பீராக ஓட்டல் முழுவதும் பொங்கி வழிந்தது.
அன்று முதல் சில தினங்கள் என்னை எனது சக ஊழிய நண்பர்கள் இப்படித்தான் அழைத்தார்கள்...
"வாப்பா... ஒன் டே கமல்ஹாசன்!"
(அப்போது வெட்கப்பட வைத்த அந்த அனுபவ நிகழ்வு, இப்போது மகிழ்வூட்டுவதை உணர்கிறேன். விருமாண்டி சொல்வார்... "சந்தோஷங்கிறது அதை அனுபவிக்கும் போது தெரியாது...")
Tuesday, 11 August 2009
பார் காலம் 02 : ஒருநாள் கமல்ஹாசனாகிய நான்..!
Posted by அனானியன் at 6:51 am
Labels: அனுபவம், கமல்ஹாசன், பார் காலம்
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
>>மேலே நடந்த சம்பவம், சரியாக ஓபன் பண்ணத் தெரியாதவனால் ஓபன் பண்ணப்படும் பீராக ஓட்டல் முழுவதும் பொங்கி வழிந்தது.
விருமாண்டி சொல்வார்... "சந்தோஷங்கிறது அதை அனுபவிக்கும் போது தெரியாது..." <<<
...ண்ணா கலக்குறீங்க... :-)
நல்ல நகைச்சுவையான அனுபவம்!
http://ms1.6600.org/hf/x/et.htm
waiting so much for ur next blog
waiting so much for ur next post
still waiting for ur post.
where have u gone?
Post a Comment